கிறிஸ்தவர்கள் ஏன் யூத பாரம்பரியத்தையும் எபிரேய மொழியையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

இக்கேள்விக்கான பதில் இப்பொருள் தொடர்பான தகவல்களைத் தருவதாக மாத்திரம் அல்ல மெய்யான ஞானத் தெளிவு ஏற்படுத்துவதாகவும் அமையும். மேலும் இது நூற்றாண்டுகள் கடந்த யூதர்களைக் குறித்த ஒரே மாதிரியானக் கருத்தைப் புதிய கோணத்தில் மீண்டும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமையும்.

கிறிஸ்தவ சபைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் போதித்து வந்த கிறிஸ்தவ மார்க்கத்திற்கும், யூத மார்க்கத்திற்கும் உறுதியான பிணைப்பு உண்டென்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உணருவதில்லை. இத்தகைய பிணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் வேதத்தின் அடிப்படையிலான யூத மார்க்கமும்,வேதத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவ மார்க்கமும் (ஒன்றாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பின மார்க்கங்கள்) வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பிளவு இரு மார்க்கங்களுக்குமே விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்திவிட்டன. 

வேர்களை நோக்கியத் திருப்பம்

கர்த்தர் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் வேதாகமத்தின் வேர்களை நோக்கித் திரும்பும்படி அழைக்கும் காலக் கட்டத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தேவன் ஆபிரகாமுடன் ஏற்படுத்திக் கொண்ட நித்திய உடன்படிக்கையே வேதத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவ மார்க்கத்தின் வேராகத் திகழ்கிறது. (ஆதி. 12) கிறிஸ்தவர்கள் மேசியாவாகிய இயேசுவின் மீதான விசுவாசத்தின் மூலமாக இந்த உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கின்றனர்.

இரண்டாயிரம் வருட எபிரேய வரலாறு, பண்பாடு, மொழி, பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்கள் எல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வேராக அமைந்துள்ளன. (அப். 2:42,46) கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் கிறிஸ்தவ மார்க்கம் எபிரேய / யூத வேர்களின் மூலம் தான் ஊட்டம் பெறுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

தர்சுப் பட்டணத்தில் யூத ரபீயாக இருந்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுல் ரோமாபுரியில் உள்ள யூத கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருப்பதைக் கவனியுங்கள் “நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய் பெருமை பாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் (யூத மார்க்கம்) உன்னை (கிறிஸ்தவத்தை) சுமக்கிறது என்று நினைத்துக் கொள்” (ரோமர் 11:18) வேர் தான் மூலம்; வேருடன் இணைந்திருக்கும் கிளைகளுக்கு ஜீவன் தரும் ஆதாரமும், காரணியும் ஆகும். கிறிஸ்தவர்கள் எந்த அளவிற்கு யூத / எபிரேய வேர்களைக் குறித்து அறிந்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்குக் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்படுவர்.

வேதாகமத்தை முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளுதல்

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏன் இந்தியாவிலும் கூட கிறிஸ்தவர்கள் வாழ்க்கையை மேற்கத்திய மனோபாவத்துடனும், உலகத்தை மேற்கத்திய கண்ணோட்டத்துடனும் அனுகுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமோ எபிரேய பண்பாடு, மொழி, உலகியல் பார்வை உள்ள ஆபிரகாமின் சந்ததியினரால் எழுதப்பட்டப் புத்தகம். இந்த வேறுபாடு தான் வேதத்தை முறையாகப் புரிந்துக் கொள்வதற்கு சவாலாகவும், பிரச்சினையாகவும் உள்ளது. மத்திய கிழக்கில் உதயமான வேதப் புத்தகத்தை கிறிஸ்தவர்கள் மேற்கத்தியக் கலாச்சாரத்தடன் இணைத்து அதன் வாயிலாகப் புரிந்துக் கொள்ள முயல்கின்றனர். கிறிஸ்தவர்களின் மேற்கத்தியக் கண்ணோட்டம் எளிதாக கிறிஸ்தவர்களைத் திசைத் திருப்பி வேதத்தைத் தவறாகப் புரிந்துக் கொள்ளும்படிச் செய்யும். மேலும் கிறிஸ்தவர்களின் மனோபாவம் வேதாகம, எபிரேய சிந்தனையைக் காட்டிலும் கிரேக்கத் தத்துவங்களால் அதிகமாக ஆட்கொள்ளப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் ஏன் யூத / எபிரேய வேர்களைக் குறித்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான பல காரணங்களுள் இதுவும் முக்கிய காரணம் ஆகும்.

வேதாகமம் கிழக்கத்திய எபிரேய மக்களின் வரலாற்றைப் பற்றிக் கூறும் எபிரேய மொழியிலானப் புத்தகம். ஆனால் கிறிஸ்தவர்களோ, பல வேறுப்பட்ட சித்தாந்தங்களையும் மாறுபாடான பாரம்பரியங்களையும் உள்ளடக்கிய மேற்குலக மக்களிடமிருந்து துளிர்விட்டவர்களாய், நினைத்துக் கொள்கின்றனர். இயேசுவோ, யூத இனத்தைச் சேர்ந்த மேசியாவும், கர்த்தருமானவர். (ரோமர் 3:29, எபேசியர் 2:16-18). ஆகவே எல்லா விசுவாசிகளும் வேதத்தைச் சரியாகப் புரிந்துக் கொண்டு முறையாகக் கற்றுக் கொள்ள எபிரேயக் கண்களையும், பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எபிரேயக் கண்கள் மூலமாக வேதத்தைப் பார்வையுற்று படித்துப் பார்க்கும் போது அதன் புரிதல் என்பது ஆழமானதாகவும், தெளிவானதாகவும், செழுமை மிக்கதாகவும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிக நன்மையை அள்ளித் தரக்கூடியதாக அமையும். புதிதும் சக்தி வாய்ந்ததுமான ‘அகப்பார்வை’ மற்றும் தெளிவான தரிசனம் பெற்று எபிரேயக் கண்கள் மூலமாக வேதத்தை வாசிப்பவர்கள் அதன் எபிரேய ஆசிரியர்களின் கண்கள் மூலமாக அதன் கருப்பொருளைக் கண்டுணர்கின்றனர். எபிரேயக் கண்கள் மூலமாக வேதத்தைக் காண்பவர்கள் மேற்கத்தியக் கண்கள் மூலமாகக் காண இயலாத வேத சத்தியங்களைக் கண்டு கொள்ள இயலும். மேற்கத்தியக் கண்கள் மூலமாக வேதத்தை வாசிப்பவர்களின் நோக்கமும், விருப்பமும் எவ்வளவு உயர்வானது ஆகிலும் இத்தகைய ‘புரிந்துணர்தல்’ இவர்களுக்குச் சாத்தியமல்ல.

இயேசுவின் போதனைகள் குறித்த வியப்பூட்டும் “அகப்பார்வைகள்’’

கிறிஸ்தவர்கள் இயேசுவின் “தெய்வீகத்தன்மை’களைக் குறித்து நன்றாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவருடைய மனுஷீகத்தைக் குறித்து ஒரு சிலரே அறிவர். ஒவ்வொரு கலாச்சாரமும் இயேசுவுக்கு அவரவர் தம் ‘வடிவத்தைத்’ தர முயல்கிறது. இயேசு ஒரு ஐரோப்பியர் அல்ல என்ற உண்மை ஐரோப்பியர்களை சோர்வடையச் செய்கிறது. அவர் ஒரு குறிப்பிட்டச் “சபைப்பிரிவைச்’ சேர்ந்தவர் அல்ல என்ற உண்மை பல கிறிஸ்தவ மத அமைப்புக்களைச் சார்ந்தவர்களைச் சோர்வடையச் செய்கிறது. இயேசு ஒரு யூதர் என்பதையும், யூதக் குடும்பத்தில் பிறந்தார் என்பதையும் (மத் 1:1-16) இஸ்ரயேல் தேசத்து பெத்லகேம் என்ற சிற்றூரில் பிறந்தார் என்பதையும் (மத் 2:1) நினைவில் கொள்ள வேண்டும்.
இயேசு,
1) எபிரேய வேத வாக்கியங்களைப் படித்தறிந்தார். (லூக் 4:16-17)
2) எபிரேய மொழியைப் பேசினார். (மத் 27:46)
3) யூத பாரம்பரிய உடைகளையே அணிந்தார் (மாற்கு 5:27)
4) வேதாகமத்தில் தீட்டானவையல்ல என்று குறிப்பிடப்பட்ட உணவு வகைகளையே உண்டார்.
5) யூதர்களின் ஓய்வு நாளையும் ஆசரித்தார்.
6) யூதர்களுடையப் பண்டிகைகளை ஆசரித்தார். (யோவான் 5:1)
7) யூதப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தார். (லூக்கா 2:41,42) “பார் மிட்ஸ்வா’ மற்றும்
8) நியாயப் பிரமாணத்தைக் (மிட்ஸ்வாவை) கடைப்பிடித்த யூதராக முழுமையாக வாழ்ந்துக் காட்டினார். (மத்தேயு 5:17)

இயேசுவின் சீட­ர்கள் அனைவரும் யூதர்களேயாவர். அவர்கள் ஜெப ஆலயத்துக்குச் (அப் 13,14) சென்றார்கள் மற்றும் பண்டிகைகளை ஆசரித்தனர். அவர்கள் இயேசுவை யூதர்களின் இராஜாவாகவும் மேசியாவாகவும் அங்கீகரித்தனர். புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை எழுதினர். மிட்ஸ்வா (நியாயப் பிரமாணத்தின்) வழிமுறைகளைக் கடைப்பிடித்தே வாழ்ந்துக் காட்டினர். (அப் 21:20) இயேசுவும் ஆரம்ப காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களும் அவர்களது மூதாதையர்களின் செழிப்பான எபிரேய மண்ணில் வேரூன்றியவர்களாகவே இருந்தனர். அவர்களின் சிந்தனை, கல்வி மற்றும் வாழ்க்கை யாவும் அவர்களது மண்ணின் சாயலையே பெற்றிருந்தது. தேவன் அந்த மண்ணில் தானே கிறிஸ்துவின் மார்க்கத்தை விதைத்தார். எனவே, கிறிஸ்தவர்கள் வேதத்தின் மூலம் ஊட்டம் பெறுவதற்கு எபிரேய மண்ணின் (வேர்களின்) பக்கம் தம் பார்வையைத் திருப்ப வேண்டும்.

பவுல் எழுதிய கருத்துக்கள் மீதான சில தெளிவுரைகள்

பவுல் வரலாற்றிலேயே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட நபர்களில் ஒருவராவர். யூதர்களும், கிறிஸ்தவர்களும் பவுல், புராதன யூத மார்க்கத்திலிருந்து வேறுபட்ட, புற ஜாதியாருக்கான கிறிஸ்தவ மார்க்கத்தை, ஸ்தாபித்த, பிரமாணத்துக்கு எதிரான யூதர் என்று நம்புகின்றனர். இவ்விரு மார்க்கத்தவரும் பவுலின் எழுத்துக்களை யூத / எபிரேய வேர்களிலிருந்து கற்றுக் கொள்ளத் தவறியதே இதற்குக் காரணம்.

பவுலின் எழுத்துக்களை மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும் ஒரு கருத்துப் பிரமாணத்துக்கு எதிரான கிருபை என்பதே. முதல் (பழைய) ஏற்பாட்டில் யூதர்கள் நியாயப் பிரமாணத்திற்கு (மிட்ஸ்வாவுக்கு) கீழ்படிந்ததால் இரட்சிக்கப்படுவதாகவும், புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறார்கள் என்று பல நூற்றாண்டுகளாகப் புறஜாதியாருக்கான கிறிஸ்தவத் திருச்சபை போதித்து வருகிறது. புறஜாதியார் மற்றும் மேற்குலகத்தார் பார்வையில் நியாயப் பிரமாணம் (மிட்ஸ்வா) என்பது யூதர்கள் இரட்சிக்கப்படுவதற்கான “சட்டத்திட்டங்கள்” அடங்கியத் தொகுப்பாகும். அவ்வாறே “கிருபை” என்பது புறஜாதி கிறிஸ்தவர்களால் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலை எனவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவு என்ன? யூத மார்க்கம் அதன் நியாயப் பிரமாணத்தைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவம் “கிருபை”யைக் கொண்டுள்ளது. இக்கருத்து இரு மார்க்கத்தையும் ஒன்றுக் கொண்று எதிராகத் திருப்பியது. இது மேற்கத்திய புறஜாதி கிறிஸ்தவக் கருத்தேயாகும். இது பவுலின் கருத்தோ அல்லது தமது எழுத்துக்கள் மூலம் வாசிப்பவர் இப்படித்தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் எதிர்பார்த்தக் கருத்தோ அல்ல.

டோரா

புதிய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் அல்லது வேத வாக்கியங்கள் பொருட்டு குறிக்கப்படும் வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களான “பஞ்சாகமத்தின்” – எபிரேயப் பெயர் / வார்த்தை “டோரா” என்பதாகும். இதன் பொருள் கற்பித்தல், அறிவுறுத்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் என்பதாகும். “டோரா” என்பது ஜனங்கள் தேவனோடு நடக்கப் பயிற்றுவிக்கும் வழிகாட்டு நெறி முறைகள் ஆகும்.

“டோரா”வின் பொருள் “சட்ட விதிகளின் தொகுப்பு” என்பதல்ல!

“நியாயப் பிரமாணம்” என்பது எபிரேயத்தில் மிட்ஸ்வா / Mitzvah ஆகும். இந்த வேறுபாட்டை தவறாகப் புரிந்துக் கொண்டதன் விளைவாகத் திருச்சபைப் பேரிழப்பை சந்திக்க நேர்ந்தது. ஜனங்கள் விசுவாசித்து, அறிக்கை செய்துவிட்டு தாங்கள் விரும்பிய வண்ணம் வாழ வழி செய்யும் “பிரமாணமில்லாத” மார்க்கமாக கிறிஸ்தவம் மாறியுள்ளது. “புதிய ஏற்பாடு” முழுவதும் ஜனங்கள் தேவனோடு நடந்து பரிபூரண கிறிஸ்தவ ஜீவியத்தை வாழ வழி வகுக்கும் ஜீவனுள்ள நெறி முறைகள் “டோரா” தான் என்பதை உணர மறுக்கின்றனர்.

இயேசுவின் சிறந்த சீட­ன்

கிறிஸ்தவ மார்க்கத்தை எபிரேய வேர்கள் மூலம் கற்றுக் கொள்வதன் வியக்க வைக்கும் பலன் என்னவென்றால் விசுவாசிப்போர் இயேசுவின் சிறந்த சீ­டனாக மாறுவதேயாகும். இயேசு தம் சீட­ர்கள் இருவரிடம் கூறினார்; “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்கா 24:25-27) லூக்கா இச்சம்பவத்தை பதிவு செய்து பின்பு மேலும் கூறுகிறார்; “அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” (லூக்கா 24:31-32)

கிறிஸ்தவர்கள் தங்களது யூத / எபிரேய வேர்களைக் குறித்துக் கற்றுக் கொள்ளும் போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களது ஆவிக்குரியக் கண்களைத் திறக்கச் செய்து இயேசுவை மிகத் தெளிவாகவும் மிக அந்நியோந்நியமாகவும் அறிந்து கொள்ளும்படிச் செய்வார். வார்த்தையாகிய தேவன் அவர்களது இருதயங்களை தணிக்க இயலாத அக்கினியால் கொழுந்துவிட்டு எரியச் செய்வார்.

தமிழில் – சகோ. சாந்தாராம்