குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

ஏதேனில் ஆதி மணம்

Nissuin/ נִשּׂוּאִין /நிஸ்ஸுயீன் என்கிற எபிரேயச் சொல்லின் பொருள் ‘திருமணம்’ ஆகும்.

ஆதி. 2:23: இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

திருமண வீடு என்றால் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இடமாகவே இருக்கும். சிறுவர்களின் ஓட்டமும், அவர்களின் குதூகலமும், நீங்கள் எங்கள் எல்லைக்குள் வர வேண்டாம் என்று சொல்லும். பிளாஸ்டிக் இருக்கைகள் வந்த பிறகு கர்முர் சத்தம் இல்லை. அவை வருவதற்கு முன் இரும்பு நாற்காலிகளில் ஏற்படுத்தும் கீரிச் சத்தம் சிலருக்கு எரிச்சலாக இருந்தாலும், அந்த சத்தத்தைக் கேட்பது அதுவொரு தனிச் சுகம். அப்ப எடுக்கிற போட்டோக்கள் அனைத்தும் பிலிம் என்பதால் இன்றைக்கு இருப்பது போன்று டிஜிட்டல் டச் அப்  அதிகம் செய்ய முடியாது. எப்படி இருக்கிறோமோ அப்படித் தான் போட்டோவும் வரும்.

திருமணம் முடித்தவர்கள் ஏன்டா திருமணம் முடித்தோம் அப்படின்னு நினைத்தவர்கள் நிறைய பேர்கள் உண்டு.

திருமணத்தை தேவன் தான் ஏற்படுத்தினார். தேவன் நல்லவரா? கெட்டவரா? – தேவன் நல்லவர்!

 அவர் ஏற்படுத்திய இந்த திருமணம் என்ற ஏற்பாடு நல்லதா? கெட்டதா? தேவன் நல்லதை மட்டுமே செய்பவர். நல்லது + நல்லது = மிகவும் நல்லது. பிறகு ஏன் திருமண வாழ்வு கசந்து விடுகிறது?.

தேவன் தான் திருமணம் என்பதை கண்டுபிடித்தவர். எந்தவொரு தத்துவவியலாளர்களும் இந்த திருமணம் என்ற பந்தத்தைக் கண்டுபிடிக்கவில்லை.

மேலும் திருமணம் முடித்தவர்களைத் தான் வேதாகமம் “மனிதன்” (ஆதி.5:3) என்றழைக்கிறது.

திருமண வாழ்வை குறை கூறுபவர்கள், அதைப் படைத்த தேவனையே குறை கூறுகிறார்கள்.

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவில் தேவனாகிய கர்த்தர் இருந்தார். குடும்ப உறவுகளுக்குள் கர்த்தர் இருக்கிறாரா? என்ற கேள்வியை முன் வைக்க வேண்டிய சூழல் இன்றுள்ளது. இதை எபிரெய மொழியின் அடிப்படையில் விரிவாக காண்போம்.

ஆதி.2:23: …..இவள் மனுஷனில் எடுக்கப்பட்டப்படியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய வார்த்தை மனுஷன்.

மனுஷன் என்பதற்கான எபிரெய வார்த்தை ஈஷ் – EEYSH – איׁש என்பதாகும். இதில் மூன்று எபிரெய எழுத்துகள் ஆலெப், யோட், ஷீன், உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

איׁש

மனுஷி என்பதற்கான எபிரெய வார்த்தை இஷ்ஷா ISH-SHA – אִשָּׁה என்பதாகும். இதில் உள்ள மூன்று எழுத்துகள் ஆலெஃப், ஷீன், ஹே ஆகும்.

אִשָּׁה

ஈஷ் என்ற வார்த்தையிலுள்ள யோட் என்ற எழுத்தையும், இஷ்ஷா என்ற வார்த்தையிலுள்ள ஹே என்ற எழுத்தையும் எடுத்து தனியாக எழுதினால்

יָהயா என்ற வார்த்தை வரும். ‘யா’ என்றால் யாவே* – கர்த்தர் என்பதாகும்.

איׁש אִשָּׁה 

‘யா’ י – ה

மனுஷன் என்பதில் மீதமுள்ள எழுத்துகள் ஆலெஃப் א, ஷீன் ש . மனுஷி என்பதில் மீதமுள்ள எழுத்துகள் ஆலெஃப் א , ஷீன் ש

אשׁ אשׁ

ஆலெஃப், ஷீன் אשׁ இவ்விரண்டு எழுத்துகளையும் இணைத்து எழுதினால் நெருப்பு என்ற வார்த்தை வரும்.

குடும்ப வாழ்க்கையில் கர்த்தர் இல்லையென்றால் அந்த குடும்பத்தில் சண்டைகளும் சச்சரவுகளுமாகிய நெருப்பு இருந்து கொண்டே இருக்கும்.

கர்த்தர் குடும்பத்தில் இருந்தாரென்றால் அந்த குடும்பம் ஆவியானவரின் அபிஷேகத்தில் அது “அக்கினியாக” இருக்கும்.

வேதாகமத்தில் நெருப்பு பல விதங்களில் எடுத்துக்காட்டப்படுகிறது. சுத்திகரிப்புக்கும் நெருப்பு பயன்படுகிறது. அழிவிற்கும் குறிப்பிடப்படுகிறது.

நம்முடைய குடும்பங்கள் கர்த்தருடைய அக்கினியினால் சுத்திகரிக்கப்பட வேண்டுமே தவிர, சாத்தான் கொண்டு வரும் அக்கினியில் எரிந்து விடக் கூடாது.

தேவனுடைய அக்கினிக்குள் நமது குடும்பம் இருக்குமென்றால்,
நாம் ஆவியில்
அனலாயிருப்போம் (ரோமர் 12:11),

அவ்வித அனுபவத்தில் இருக்கும் போது, ‘ஏதேனில் ஆதி மணம்’ என்ற பாடல் தொடர்ந்து தொனித்துக் கொண்டே இருக்கும்.

ஆமென்!.

கிறிஸ்துவின் பணியில்,

பாஸ்டர் C. டேவிஸ்

*எபிரெய எழுத்துகளுக்கு பொருள் உண்டு. இங்கு யோட் என்ற எழுத்தின் பொருள் கை என்பதாகும்.
ஹே என்ற எழுத்து பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும். ஆவியானவரின் ஆளுகை நமது
குடும்பங்களுக்குத் தேவை என்றும் பொருள் கூறலாம்.