குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

Talmud תַּלְמוּד – டல்மூட்

டல்மூட் என்றால் கற்றல் / ஆய்வு  என்று பொருள்படும். Lamad / לָמַד / லாமட் இதன் வேர்ச்சொல். மிஷ்னா மற்றும் கெமாரா இணைந்து ஒரு சேர Talmudתַּלְמוּד – டல்மூட் என்று அழைக்கப்படுகிறது. டல்மூட், இரு பெரும் நிலபரப்புகளில் உள்ள ஞானிகளால் ஆக்கப்பட்டதால் அது Jerusalem Talmud / תַּלְמוּד יְרוּשַׁלְמִי / டல்மூட் எருஷல்மீ (கி.பி. 200 – கி.பி. 400) என்றும் டல்மூட் Talmud Bavli / תַּלְמוּד בבלי / டல்மூட் பாவ்லி (கி.பி. 200 – கி.பி.600) என்றும் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிற்கும் ஒரே மிஷ்னா ஆனால் டல்மூட் எருஷல்மீக்கு, எருசலேம் கெமாரா அது போல் டல்மூட் பாவ்லிக்கு பாபிலோனிய கெமாரா. டல்மூட் எருஷல்மீ முதல் முதலில் எழதி முடிக்கப்பட்டு இருந்தாலும் Geonim / கவோனிம் என்றழைக்கப்பட்ட பாபிலோனிய ரபிகள் எழதிய டல்மூட் பாவ்லிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

பின் வரும் மிட்ராஷ் வேறு மிஷ்னா வேறு என்பதை நினைவிற் கொள்ளவும்.

Midrash מִדְרָשׁ மிட்ராஷ்

மிட்ராஷ் என்றால் தேடு, விசாரி என்று பொருள்படும். இது வேதாகம பொருள் விளக்க முறைகள், வழிமுறைகள், ஒழுங்குகள் முதலியவைகளை முன்னிருத்துகிறது. Darash / דָּרַשׁ / டரஷ் இதன் வேர்ச்சொல். நடைமுறையில் சந்திக்கும் அல்லது எழும் இறையியல் கேள்விகளுக்கு Torahתּוֹרָה / டோராவில் உள்ள ஆண்டவரின் வார்த்தையில் தேடி விசாரித்து, ஆராய்ந்து பதில் தெரிந்து கொள்வது மிட்ராஷ். இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது சட்டம், மத சம்பந்தப்பட்ட காரியங்கள், முறைமைகள், பழக்க வழக்கங்கள் Midrash Halacha / மிட்ராஷ் ஹலாக்கா என்றும், வேதத்தில் உள்ள கதைகள், நீதிநெறி சார்ந்த கேள்விகள், இறையியல், நீதிக்கதைகள், உபதேசங்கள் Midrash Aggadah / மிட்ராஷ் ஹகாடா என்றுமுள்ளது. ஹகாடா என்றால் ‘பகர்தல்’ என்று பொருள்.

மிட்ராஷ் ஹலாக்கா – பொதுவாக Torahתּוֹרָה / டோராவில் உள்ள வார்த்தை பல பொருள் தரும்படி அமைந்துள்ளது. எந்த சூழ்நிலையிலும், யூதர்கள் வேதத்தில் உள்ள சட்ட விதிகளை என்ன மாதிரியான நடைமுறையில், கை கொள்வது? இதற்கான பதிலை, வழிகாட்டுதலை மிட்ராஷ் ஹலாக்கா தர முயற்சிக்கிறது. வேதம் சொல்லும் பொருளுக்கும் நடைமுறை சூழல்களுக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்துகிறது. இரண்டாவது ஆலயத்திற்கு பின்னான காலங்களில், பலிகளுக்கு மாற்றாக புதிய ஆராதனை முறைமைகள், சடங்குகள் ஏற்படவும், பராமரிக்கப்படவும், அவைகள் வேத வார்த்தைகளோடு தொடர்புடையதாகவும், அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவும் மிட்ராஷ் ஹலாக்கா சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

மிட்ராஷ் ஹகாடா – கி.பி. 200 – கி.பி. 1000 வரை உள்ள காலக்கட்டத்தில் இது தொகுக்கப்பட்டது. பொதுவாக “மிட்ராஷ் என்ன சொல்கிறது என்று…” சொன்னால் அது மிட்ராஷ் ஹகாடாவில் உள்ள செய்தியே ஆகும். இரண்டாவது ஆலயத்திற்கு பின்னான அன்றைய இஸ்ரயேல் பல போர்கள், அரசியல் வன்முறைகள், பல மதங்கள், கலாச்சாரங்கள் என்று பல்முனை தாக்குதலுக்குள்ளானது. இந்த நிலையில் யூதர்கள் தனி ஒரு அடையாளம் கொண்ட இனமாக வாழ்வதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்த, வழிகாட்ட, Torah / תּוֹרָה / டோராவில் இருந்து மக்களுக்கான இறை வழிச் சாலையை சொல்ல மிகச் சிறந்த கருவியாக உருவானது மிட்ராஷ் ஹகாடா. நீதிக்கதைகள், உருவகங்கள், மூதுரைகள், பாடல் வரிகள், புலம்பற் பாட்டு, பிரார்த்தனைகள், நையாண்டி மற்றும் கடுமையான வாதங்கள், உயர்வு நவிற்சி, எழுத்துகளின் வரிசைமாற்றங்கள், கணக்கீடுகள், எழுத்துகளின் எண்கணித மதிப்புகள் இவை அனைத்தும் இதில் உள்ளது.

எளிதாகப் புரிந்து கொள்ள விளக்குவது என்றால், ஹலாக்கா – அன்றாட திருச்சபை ஆராதனைகள், முறைமைகள் ஆகியவற்றைக்  குறிக்கும் காரியமாகும். அதே திருச்சபையில், நடைமுறையில் உள்ள வேத பாட ஆய்வு வகுப்புகள் – ஹகாடா ஆகும்.