குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

எபிரேய ஞானிகள் Torahתּוֹרָה/ டோரா மற்றும் Tanakhתַּנַ״ךְ/ டனாக் குறித்து 10ம் நூற்றாண்டு வரை எழுதி வழங்கிய விளக்கவுரை எழுத்துக்கள் “ரபிகள் இலக்கியம்” ஆகும். இது இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட தொடர்ந்து நடந்து வருகிறது. கி.மு. 250 முதல் 650 கி.பி. வரை வாழ்ந்த எபிரேய ஞானிகளை எபிரேயத்தில் Sifrut Hazal / פרות חז”ל / சிப்ருத் ஹஸல் என்று அழைக்கின்றனர். இவர்களது எழுத்துக்களே “ரபிகள் இலக்கியம்” என்று பெருன்பான்மையாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்றின் நீட்சியாக ஒவ்வொன்றும் அடுக்கடுக்காக, அடுத்தடுத்த, காலக்கட்டங்களில் புதிய விளக்கங்களோடு எழுதப்பட்டது.

Mishnaמִשְׁנָה மிஷ்னா

இதில் முதல் முதலில் எழுதப்பட்ட மிகப் பெரிய தொகுப்பு Mishna / מִשְׁנָה / மிஷ்னா ஆகும். மிஷ்னா என்றால் திரும்பத் திரும்ப வாய்மொழியாக யூத மரபுசார்ந்த நன்னெறி காரியங்களை கடத்துவது ஆகும். ஆதலால் இதனை Oral Torah / வாய்மொழி டோரா என்றும் அழைக்கின்றனர். இது எபிரேய மொழியிலும் சில பகுதிகள் Aramaic / אַרָמָיָא / அராமாயா மொழியிலும் உள்ளது.

கி.பி. 70ல் ரோமர்கள் இரண்டாவது ஆலயத்தை அழித்த காலத்திற்கு பின் கி.பி. 200ன் இறுதியில் மிஷ்னா வெளியிடப்பட்டது. இதனை பதிப்பித்தவர் Yehudah HaNasi /  יהודה הנשיא / எஹுடா ஹாநாசி. மிஷ்னாவில் வெளிப்படும் வார்த்தைகளில் ஆலயம் அழிக்கப்படவில்லை, வரலாற்றில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து விடுபட்டு, ஆலயச் சடங்குகளைத் தழுவி, ஒரு குழுவாக பங்காற்றி, பரிசுத்த வாழ்க்கை வாழும் நிலையையே அதிகம் விவரிக்கிறது. இதில் ரபிமார்களின் வாதங்கள் இடம் பெற்றுள்ளது. யூத நெறிமுறைகளை, மரபுகள் முதலியவைகளை மிக கவனமாக தெரிவு செய்து தொகுத்து விவரிப்பதால் மிஷ்னா ஏறத்தாழ ஒரு சட்ட புத்தகமாக காட்சியளிக்கிறது.

மிஷ்னாவானது ஆறு பெரும் ஒழுங்குமுறைமைகளைக் கொண்டதாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு,
1. Zeraim / זרעים – விதைகள்
2. Moed / מועד – பண்டிகை
3. Nashim / נשים – பெண்கள்
4. Nezikinנזיקין – சட்டம்
5. Kodashim
/ קדשים – புனிதமானவைகள்
6. Tohorot / טהרות  – தூய்மையானவைகள்.
இதனை  The Six Orders of the Mishnah – Shisha Sedari Mishna / ששה סדרי משנה  / ஷிஷா செடாரி மிஷ்னா என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு ஒழுங்கு முறைமையும் 7-12 கட்டுரைகளாகவும் (7-12 Tractates), ஒவ்வொரு கட்டுரையும் பல அதிகாரங்களாகவும் (Chapters) அவைகள் பின் பல சட்ட நடத்தை முறைகளைக் (Halachot) கொண்டதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே பின் வந்த இலக்கியங்களுக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. மிஷ்னா ரபிமார்கள் Tannaim / டன்னாயிம் என்றழைக்கப்படுகின்றனர்.

Tosefta –  תוספתא – டோசெஃப்டா

டோசெஃப்டா என்றால் கூடுதலாக, பிற்சேர்க்கை என்று பொருள்படும்.  மிஷ்னாவில் உள்ள சற்றே கடினமான பகுதிகளை மேலும் கூடுதலான சிறு சிறு தகவல் தந்து விளங்க வைப்பது டோசெஃப்டா ஆகும். இதுவும் எபிரேய மொழியிலும் சில பகுதிகள் Aramaic / אַרָמָיָא / அராமாயா மொழியிலும் உள்ளது. மிஷ்னாவில் விடுபட்ட மரபுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனாலேயே இது மிஷ்னாவின் தொகை நூலாகப் பார்க்கப்படுகிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் விளக்கவுரையின் நீளம் மற்றும் சொற்களின் மிகுதியே. மிஷ்னா சட்டக் கருத்துக்களை சுருக்கமாக, சிறு வாக்கியங்களால் விளக்குகிறது. டோசெஃப்டா – கூடுதல் தகவல்கள், சட்ட காரணங்கள் மேலும் சில நடைமுறை சாத்தியங்கள் என்று விரித்து பேசுகிறது.

Gemaraגמרא – கெமாரா

கெமாரா என்றால் கற்பி என்று பொருள்படும். இது ஒரு Aramaic / אַרָמָיָא / அராமாயா சொல்லாகும். எபிரேயத்தில் நாம் அறிந்த Lamad / לָמַד / லாமட் சொல்லுக்கு நிகரானது. அன்றைய பாபிலோனிலும் (ஈராக்) இஸ்ரயேலிலும் வாழ்ந்த எபிரேய ஞானிகள் பாரம்பரிய போதனைகள் மற்றும் மிஷ்னாவில்  உள்ள போதனைகளை தொடர்ந்து படித்து வந்தனர். இந்த மரபார்ந்த போதனைகள் அனைத்தையும் Moses / מֹשֶׁה / மோஷே,  Mt.Sinai / סִינַי / சீனாய் மலையில் பெற்றதாக விவரிக்கின்றனர்.  வாய் மொழி வாதங்கள் அனைத்தையும் மணப்பாடம் மற்றும் குறியீடுகள் மூலம் பாதுகாத்து பின்னர் ஒவ்வொரு தலைமுறை ஞானிகளையும், அவர்களது போதனைகளையும், விளக்கவுரைகளையும் அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல சரியாகத் தொகுத்து வைத்தனர். இதனைச் செய்த ஆசிரியர்கள், வேத கால பாரம்பரியம் மற்றும் ரபிமார்கள் பாரம்பரியம் ஆகிய இரண்டும் ஒத்திசைவு காண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஆதலால் அறியப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு சான்றுரைகள் தந்து சொல்லப்பட்ட நெறிமுறைகளுக்குள் உள்ள வேறுபாடுகளை விளக்கினர். இதுவே கெமாராவின் தொடக்கம். கெமாரா ரபிமார்கள் Amoraim / அமோரைம் என்றழைக்கப்படுகின்றனர்.