உலகம் இவ்வாறு கர்த்தர் அனுமதித்த பல்வேறு நிகழ்வுகளால் அலைகழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது.  அமெரிக்காவில் யூதர்களின் தனி நாடு – இஸ்ரயேல் தேசம் என்னும் கோரிக்கைக்கு ஆதரவு எப்படி இருந்தது? எப்படி அங்கீகாரம் கிடைத்தது என்று பார்ப்போம்.

 அமெரிக்காவில், யூதர்களின் தனி நாடு – இஸ்ரயேல் தேசம் என்று இருக்க விரும்பியர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் அரசியல் தலைவர் மற்றொருவர் அவரது நண்பர். முதலாமவர் ஹாரி ட்ருமன் அடுத்து அவரது நண்பர், வழக்கறிஞர் Clark Clifford / க்ளார்க் கிளிப்போர்ட்.. முழு அமெரிக்காவும் அன்றைய நாட்களில் இந்த கோரிக்கையை எதிர்த்தது!

1933-1945 Franklin D. Roosevelt / பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் 32வது ஜனாதிபதியாக இருந்தார். அடுத்த ஜனாதிபதி Henry A. Wallace / ஹென்றி வாலஸ் என்பவர் வர வேண்டி இருந்த நிலையில் ரூஸ்வெல்ட் திடீரென Senator Harry S. Truman / செனேட்டர் ஹாரி ட்ருமன் என்பவரை முன் மொழிந்து அவரை 33வது ஜனாதிபதியாக பதவி ஏற்க துணை புரிந்தார்.

செனேட்டர் ஹாரி ட்ருமன் யார்? இவர் ஏன் இப்பதவிக்கு வர வேண்டும்? இங்கு தான் கர்த்தரின் கரம் தன் தாசர்களை எப்படி உயர்த்துகிறது என்பதை அறியலாம். ஹாரி ட்ருமன் ஒரு கிறிஸ்தவ விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே வேதாகமத்தை தீவிரமாக வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். திருச்சபை ஞாயிறு பள்ளியில் மட்டுமே தன் எட்டு வயது வரை கல்வி கற்றார். Presbyterian மற்றும் Baptist சபைகளின் ஐக்கியத்தில் வளர்ந்தார். ஆதலால் வேதாகமத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். வேதத்தில் சொல்லப்பட்ட வரலாறு, தீர்க்கதரிசனம் குறித்த தெளிவு கொண்டிருந்தார். மேலும் இவருக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. முதல் உலகப் போர் சமயம் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்து மேஜர் பதவி பெற்று வெளி வந்தார். இராணுவப் பணி புரிந்த சமயத்தில் Edward Jacobson / எட்வர்ட் ஜேக்கப்சன் என்பவர் அறிமுகமாகி நெடு நாளைய நண்பராகிறார். பின் 1922 முதல் மாவட்ட நீதிபதியாக, மாகாண நீதிபதியாக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் பணி புரிந்து, 1935ல் மிசோரி மாநில செனேட்டர் ஆகிறார்.

இவரைத் தான் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்து 33வது ஜனாதிபதியாக பதவி ஏற்க வைக்கிறார். இன்று போலவே அன்றும் அமெரிக்காவில் அரபு நாடுகளின் எண்ணை வளத்தை கருத்தில் கொண்டு அரேபியர்களை ஆதரித்து US Congress / அமெரிக்க காங்கிரசில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கருத்துகளை கூறி வந்தனர். ஹாரி ட்ருமன் அரசில் இருந்த மிக முக்கியமாணவர்களான முப்படைகளின் தலைமை அதிகாரிகள், பாதுகாப்பு துறை செயலர் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் George C Marshall / ஜார்ஜ் மார்ஷல் போன்றோர் கடுமையான எதிர்ப்பாளர்களாக இருந்தனர்.

ஜார்ஜ் மார்ஷல் அடிப்படையில் மிகச் சிறந்த இராணுவ வீரர். இரண்டாம் உலகப் போர் சமயம் அமெரிக்க முப்படைகளின் தலைவராக பணி புரிந்து, போரினால் சேதமடைந்த ஐரோப்பாவை புனரமைக்க Marshall Plan என்னும் திட்டம் தீட்டி நடைமுறை படுத்தி, புகழ் பெற்ற வாரயிதழான TIME பத்திரிகையின் Man of the Year என்று அட்டைப்படத்தை 1943 மற்றும் 1947 ஆண்டுகளில், இரண்டு முறை அலங்கரித்து பெரும் புகழுக்கு, அனைத்து தகுதியோடு வலம் வந்து கொண்டு  இருந்தார்  (பின் 1953ல் நோபெல் சமாதன பரிசு பெற்றார்)
ஹாரி ட்ருமன் இம் மனிதரை மிகவும் மதித்து போற்றினார். ஜார்ஜ் மார்ஷல் ஜனாதிபதி ஹாரி ட்ருமனிடம் – நீங்கள் யூதர்களுக்கான தனி தேசத்தை ஆதரிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டார். பல வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. ட்ருமன் ஒரு கருத்தும் சொல்லவில்லை. அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அந்நாட்களில் அமெரிக்காவில் யூத எதிர்ப்பு என்பது நாம் அறிந்த, படித்த கறுப்பர்/ வெள்ளையர் இனப் பாகுபாடு போன்று மிக மோசமாக இருந்தது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் நம் நாட்டில் உள்ள சாதி வேறுபாடு போன்று இருந்தது. யூதர்களோடு பேசுவது, பழகுவது என்பது கீழாகப் பார்க்கப்பட்ட காலக்கட்டம். இந்த சமயங்களில் தான் கர்த்தர் ஹாரி ட்ருமனுக்கு நண்பராக எட்வர்ட் ஜேக்கப்சன் என்கிற யூதரை நண்பனாக அவர் வாழ்வில் அறிமுகம் செய்கிறார். இவர்கள் சந்திப்பு முதல் உலப்போரில் ஆரம்பித்து, பின் Haberdashery எனப்படும் ஆண்களுக்கான ஆடையகம் மற்றும் தையலகம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அது போலவே க்ளார்க் கிளிப்போர்ட் என்னும் ஒரு கிறிஸ்தவர் ஹாரி ட்ருமனின் வலது கரமாகிறார். இவரும் ட்ருமனைப் போல் ஆழ்ந்த வேத அறிவு கொண்டவர். யூதர்கள் மேல் இரக்கம் கொண்டவர்.

இவ்வாறாக கர்த்தர் ஹாரி ட்ருமனைப் சுற்றி ஒரு பாதுகாப்பு ஒன்றையும் ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.

மே 12, 1948 அன்று வெள்ளை மாளிகையில், ஜார்ஜ் மார்ஷல், பெரும் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஜனாதிபதி ஹாரி ட்ருமனிடம், யூதர்களின் தனி நாடாக “இஸ்ரயேலை” ஏன் அமெரிக்க அரசு அங்கீகரிக்கக் கூடாது என்று காரணங்களை பட்டியலிட்டார். அவர் பேசி முடித்தவுடன், ட்ருமன் தன் நண்பர் க்ளார்க் கிளிப்போர்டிற்கு பேச வாய்ப்பு கொடுக்க அவரும் இஸ்ரயேல் நாடு குறித்த ஆதரவு கருத்துகளை முன் வைத்தார். இதனால் கடும் கோபமடைந்த ஜார்ஜ் மார்ஷல் ஜனாதிபதி ஹாரி ட்ருமனிடம், “நீங்கள் இஸ்ரயேல் நாட்டிற்கு ஆதரவாக முடிவெடுத்தால் நான் வரும் தேர்தலில்  உங்களுக்கு எதிராக வாக்களிப்பேன்!!”  அறையில் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு ஜனாதிபதியிடம் யார் அப்படி பேச முடியும்? மேலும் நவம்பர் மாதம் 1948 அமெரிக்காவில் தேர்தல் நடக்கயிருந்தது.

ட்ருமன் எழுந்து “சரி நாம் அனைவரும் இன்று இத்துடன் ஓய்வு எடுக்கச் செல்வோம். நாளை சந்திப்போம்” என்றார். அனைவரும் கலைந்து சென்றனர்.

மே 13, 1948 மறுநாள் காலையில் ஜார்ஜ் மார்ஷல் ஜனாதிபதி ஹாரி ட்ருமனிடம் தொலைபேசியில், இஸ்ரயேல் நாட்டிற்கு ஆதரவாக ஜனாதிபதி முடிவெடுத்தால் அவரை எதிர்த்து தான் எந்த கருத்தையும் வெளியே பதிவு செய்யப்போவதில்லை, மேலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அனைத்தும் அவரையேச் சாரும் என்று தன் முடிவைச் சொன்னார்.

இவைகள் எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ஜனாதிபதி ஹாரி ட்ருமனை சந்திக்க அது வரை வாஷிங்டன் டிசி நகருக்கு வராத அவருடைய நண்பர் எட்வர்ட் ஜேக்கப்சன் கன்சாஸ் நகரத்தில் இருந்து வந்திருந்தார். ஜனாதிபதியும் அவருக்கு நேரம் ஒதுக்கிச் சந்தித்தார். சந்திப்பில் தன் ஜனாதிபதி நண்பரிடம், எட்வர்ட் ஜேக்கப்சன் – கர்த்தர் உம்மை இவ்வாறு ஆசீர்வதித்து வைத்து இருப்பதே இஸ்ரேல் நாட்டை நீர் அங்கீகாரம் செய்யத்தான். இவை அனைத்தும் அவராலே ஆனது என்றும், ஜனாதிபதியான  அவரிடம் எதுவுமே கேட்காத தாம் கேட்பது ஒன்றே ஒன்று! அது இஸ்ரயேல் நாட்டை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்! என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றார்.

ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட வேண்டும் மார்ச் 13, 1948ல் Dr. Chaim Weizmann / ஹயிம் வெய்ஸ்மான் என்னும் யூத தாயக இயக்கத் தலைவரை சந்தித்திருந்தார். அச்சமயத்தில் ட்ருமன் யூத பரப்புரை முயற்சிகளை அடியோடு வெறுத்தார்.

சரி ஐரோப்பாவில் நிலைமையை சற்று பார்ப்போம்.

1921ல் யூதர்கள் தங்கள்  பாதுகாப்பு தேவைக்காக Haganah / הֲגָנָה / ஹகானாஹ் என்னும் பெயரில் ஒரு துணை இராணுவப் படை ஏற்படுத்தி உள்நாட்டுச் சண்டையில் தங்களை பாதுகாத்து வந்தனர். הֲגָנָה என்றால் பாதுகாப்பு என்று அர்த்தம். ஹகானாஹ் தான் இன்று நாம் கேள்விப்படும் Israel Defense Forces (IDF) ஆக 1948ல் உருமாறியது.

மே  1948  – அன்றைய நாட்களில் பிரிட்டிஷ் அரசு Haifa / חֵיפָה / ஹெஃப்பா மற்றும் Jerusalem / יְרוּשָׁלַיִם / எருஷலாயீம் நகரங்களை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஏற்கனவே Tel Aviv / אָבִיב תֵּל / டெல் ஆவிவ் நகரத்தை உள்ளூர் யூத காவல் துறையின் கட்டுப்பாட்டிற்கு விட்டு விட்டிருந்தனர். மே 14ம் தேதி பிரிட்டிஷ் அரசு மொத்தமாக விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது.

அன்று பிரிட்டிஷ் படைகள் எருஷலாயீம் நகரத்தில் இருந்து வெளியேறியது. மதியம் டெல் ஆவிவ் நகர அருங்காட்சியகத்தில் சரியாய் 4:00 மணிக்கு கூடியிருந்த யூதத் தலைவர்கள் மத்தியில் முதலில் HaTikvah / הַתִּקְוָה / ஹடிக்வாஹ்  (பின்னாளில் தேசிய கீதமானது) பாடப்பட்டு, பின்னணியில் தியோடோர் ஹெர்ஸல் படம், தேசக் கொடிகள மத்தியில் நின்று  David BenGurion / டேவிட் பென் குரியன் (முதல் பிரதமர்)
Land of Israel / אֶרֶץ יִשְׂרָאֵל / எரெட்ஸ் இஸ்ரயேல் நிறுவப்படுகிறது என்று இஸ்ரயேல் நாட்டின் விடுதலையை பிரகடனம் செய்தார். அந்த அறிக்கையை 16 நிமிடங்களில் வாசித்து முடித்து Rabbi Fishman / ரபி ஃபிஷ்மன் என்பவரை அழைத்து Shehecheyanu / שהחינו / ஷெஹெயானு எனப்படும் ஆசீர்வாதத்தை வழங்கச் செய்கிறார்.

சரியாக பதினோரு நிமிடங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ருமன்  இஸ்ரயேல் நாட்டை ஆதரித்து கையெழுத்து இட்டார். அன்றே அமெரிக்க அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் இஸ்ரேயேலுக்கு வரத் துவங்கின. முதலில் இராணுவத் தளவாடங்கள் ஏனென்றால் அடுத்த நாளே அரபு கூட்டணி போர் தாக்குதல் செய்யத் தொடங்கி விட்டது. ஆனாலும் இஸ்ரயேல் தேசமானது இன்று வரை புத்துயிரோடு பலம் கொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் பல் துறைகளில் சிறப்புடன் இயங்கி  ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

ஆக இஸ்ரயேல் என்னும் தேசம் கர்த்தரின் வாக்குறுதிபடியே குறித்த காலத்தில் மீண்டும் உருவான வரலாற்றின் அதிசயமான தருணங்களைக் கண்டோம்.

சரி அமெரிக்க நவம்பர் மாத தேர்தலில் என்னவாயிற்று என்று பார்ப்போம். ஹாரி ட்ருமன் சார்ந்திருந்த ஜனநாயக கட்சி மூன்றாக உடைந்து Harry Truman / Storm Thurmond / Henry Wallace என்று. வலுவான எதிர் கட்சியான குடியரசு கட்சி, Tom Dewey என்னும் நியூயார்க் நகர ஆளுநரை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. ட்ருமன் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத சூழலில் பத்திரிகைகள் கூட முன்னமே “டாம் டுயி ட்ருமனை தோற்கடித்தார்” என்று தலைப்பு செய்தி அச்சடித்து வைத்திருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. அனைவரின் எதிர்ப்பார்ப்புகளையும் மீறி ஹாரி ட்ருமன் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று வரை அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. அனைவருக்கும் இது ஆச்சரியம் தான், ஆனால் கர்த்தரை அறிந்தவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று அறிந்த நாம் இந்த வரலாற்று நிகழ்வின் மூலம்,
ஆதியாகமம் 12ல் –

 3உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற வாக்குறுதியும் நிறுபனமாகிறதையும் காணலாம்.

இனி நம் காலத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுக்கு வருவோம்.

இஸ்ரயேல் தேசம் சுதந்திரம் பெற்று 70ம் ஆண்டு கொண்டாடப்பட்ட 14 மே 2018 அன்று அமெரிக்க அரசு மற்றுமொரு வரலாற்று காரியத்தை செய்தது. டெல் ஆவிவ் நகரத்தில் இருந்த தன் தூதரகத்தை எருஷலாயீம் நகருக்கு குடி பெயர்த்து அந்நகரமே இஸ்ரயேல் தேசத்தின் நித்திய தலை நகரம் என்று மீண்டும் ஒருமுறை தன் அங்கீகாரத்தை, நட்பை, ஒத்துழைப்பை உலகத்துக்கு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பறை சாற்றியுள்ளது.

11
உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. – சங்கீதம் 5

இந்த நிகழ்வை ஒட்டி இன்றைய  இஸ்ரயேல் பிரதமர் பெஞ்சமின் நட்டன்யாஹு தம் Twitter மற்றும் Facebook  பதிவுகளைக் காணலாம்.