இந்தப் புத்தாண்டில் ஒரு சிறந்த அருட் பணியாளரின் வரலாற்றை பெரும் முயற்சி எடுத்து நம் தமிழ்
மொழியில் புத்தகமாக வெளியிட்டிருக்கும் உன்னத சிறகுகள் 
பதிப்பகத்தாரின்,
ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு – தொகுதிகள் 1 & 2 புத்தகங்களை வாங்கி வாசித்து மகிழ்வோம்.
புத்தகத்தில் உள்ளவைகளை சகோ. ஜெபக்குமார் சுவையான குறிப்புகளாகத் தந்துள்ளார். 

Rev. Charles Theophilus Ewald Rhenius (1790 – 1838)

 அருட்திரு. சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ் (1790-1838)

???? பிறந்த நாடு- இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா.

???? தாய் மொழி- ஜெர்மன்.

???? 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

???? 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை.

???? நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371.

???? நிறுவிய பள்ளிகள் 107.

???? திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்லறை பேசும் சாட்சியாக முருகன் குறிச்சியில் உள்ளது.

???? பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை உருவாக்க ஆசிரிய பயிற்சி பள்ளிகள், பாடத்திட்டங்களுக்கு தேவையான புத்தங்களை உருவாக்குதல், பள்ளி நடத்த திருச்சபைகள் மூலம் நிதி திரட்டுதல் என கல்வியை வெகுசன இயக்கமாக, தமிழ் வழிக் கல்வியாக முன்னெடுத்தவர்.

???? திண்ணை பள்ளிகளில் மேட்டுக் குடிகளிடம் முடங்கிக் கிடந்த கல்வி என்னும் அறிவாயுதத்தை சாமானியர்களுக்கும் சாத்தியமாக்கியவர்.

???? மெய்ஞ்ஞானபுரம், டோனாவூர், நல்லூர், சுரண்டை, சாந்தபுரம், பாவநாசபுரம், நேசபுரம், இரட்சணியபுரம், சௌக்கியபுரம், தர்மநகரம், நாயினூர், விசுவாசபுரம், சந்தோஷபுரம், அனுக்கிரகபுரம், சீயோன் மலை, இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என ஏராளாமான ஊர்களை உருவாக்கியவர்.

???? முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தவர். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். இயல்பாகவே இனிமையாகப் பேசக்கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவர்.

???? துண்டு பிரசுர சங்கத்தை சென்னையிலும், நெல்லையிலும் நிறுவியவர் (Madras Tract and Religious Book Society).

???? ஒருநாள் வருமான காணிக்கை படைத்தல், கைப்பிடி அரிசி காணிக்கை, ஆலய பரிபாலன நிதி திட்டம் (Local Church Fund) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.

???? “தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தவர்.

???? “விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியார்களின் விதவை மனைவிகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்து வர ஏற்பாடு செய்தவர்.

???? 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப்பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

???? சென்னை வேதாகம சங்கம் 1817, நவம்பர் 5 இல் இவரது பெரு முயற்சியால் துவங்கப்பட்டது.

???? தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது திருப்புதலை செய்தவர். புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் தானியேல் வரை மொழி பெயர்த்தார். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

???? தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் (பூமி சாஸ்திரம்).

???? சாதிக்கு எதிராக முதல் கல்லை எறிந்து சமூக நீதி யுத்தத்தை துவங்கி வைத்தவர்.

???? பெண்களுக்கு பள்ளிக்கூட கதவுகள் நெல்லையில் முதன்முதலில் திறக்கப்பட காரணமாக இருந்த மகான்.

???? இவர் துவங்கிய பெண்களுக்கான விடுதிகளுடன் கூடிய சிறப்புப் பள்ளி இந்தியாவிலேயே துவங்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது பள்ளியாகும். அது இன்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது.

???? வெங்கு முதலியார் உள்ளிட்ட ஏராளமான மாற்று சமய நல் உள்ளம் படைத்தவர்களோடும் நட்பு பாராட்டியவர்.

???? காலரா, பெருவெள்ளம் என இயற்கை பேரிடர்கள் நேரிட்ட போதெல்லாம் தனக்கு தெரிந்த முதலுதவிகள் மூலம் ஓடோடி உதவிய மனிதாபிமானி.

???? தமிழ் இலக்கணம் (A Grammar of the Tamil Language: With Appendix) உள்ளிட்ட நல்ல பல நூல்களை தந்தவர்.

???? திரள் கூட்ட சுவிசேஷ இயக்கம் (Mass Movement Evangelism) இவரிலிருந்தே இந்தியாவில் துவங்குகிறது.

???? நெல்லைக்கு அடையாளமாக விளங்கும் தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) இவர் கட்டியது.

???? ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமூக நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் என தெளிந்த கோட்பாடுகளோடு தென்பாண்டிச் சீமையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர்.

???? “ 1820 முதல் 1835 வரையிலான ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்”.

???? “பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.

???? தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர் இவர், தனது சொந்த ஊரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து , மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் வரை இவர் எழுதிய நாட்குறிப்புகளின் பகுதிகள், கடிதங்கள் , அறிக்கைகள் அடிப்படையில்
Memoir of the Rev. C.T.E. Rhenius, எனும் புத்தகம் அவரது மகனால் 1841 இல் வெளியானது.

???? இந்த நூல் இப்பொழுது ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள் எனும் பெயரில் மூன்று தொகுதிகளாக தமிழில் வெளியாகிறது. ஏற்கனவே முதல் தொகுதி வெளிவந்துவிட்ட நிலையில் அவரின் கடந்த பிறந்த நாளான 2017 நவம்பர் 5 இல் இரண்டாவது தொகுதி வெளியாகி உள்ளது.

இப்புத்தகம் PDF வடிவிலும் கிடைக்கிறது. நீங்கள் உடனடியாக வாங்க விரும்பினால் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்!