பென் எஹுடாவின் மிகப் பெரிய சாதனை எபிரேய மொழி அகராதியைப் படைத்தது. அவர் இந்த முயற்சியில் இறங்கும் முன் அவர் அகராதி – என்ற வார்த்தைக்கு புதிய ஒரு சொல் படைத்தார். ஏற்கனவே மக்கள் Sefer Millim – என்கிற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர் . பென் எஹுடா அதை சுருக்கி Millon – என்கிற வார்த்தையை உருவாக்கினார் . பென் எஹுடா தன் வாழ்நாள் முழுவதும் பழமையான, அரிதான எபிரேய வார்த்தைகளை தேடித் தேடி சேகரித்தார். அது மட்டுமல்லாமல் அவர் அவ்வார்த்தைகளின் மூலம், அவை கையாளப்படும் விதம், பயன்பாட்டு உதாரணங்கள், நூற்றாண்டுகளில் அவ்வார்த்தைகளின் பொருள் மாறிய விதம் என அனைத்து தகவல்களையும் தேடினார். அதன் பொருட்டு அவர் யுரோப் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நூலகங்களுக்கு அலைந்து திரிந்தார். முதல் உலகப் போர் சமயம் டர்கியின் துன்புறுத்தலில் (Turkish persecution), இருந்து தப்பிக்க அவர் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் நான்காண்டு காலம் வடகிழக்கில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் தம் தேடுதல் பணிகளை மேற்கொண்டார்.

அவர் 1914ல் பாலஸ்தீன தேசத்தில் இருந்து வெளியேறும் போது  4,50,000 குறிப்புகள் தம் வசம் சேர்த்து வைத்திருந்தார். அதை அனைத்தையும் ஒழுங்காக பொதித்து எருஷலாயீமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பத்திரப்படுத்தி வைக்க சேர்ப்பித்தார். இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஏறத்தாழ 2000 வருட காலத்தில் எழுதப்பட்ட சுமார் 40,000 புத்தகங்களில் இருந்து அவர் திரட்டியவை.

நாம் அகராதி என்று நினைப்பதை விட அதிக மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் அது போன்ற ஒன்றைத் தான் தயாரிக்க வேண்டும் என்று பென் எஹுடா விரும்பினார். எபிரேய மொழி கலைக்களஞ்சியம் / Hebrew Language Encyclopedia – இதுவே அவரது இலக்காக இருந்தது. அவர் ஒவ்வொரு வார்த்தையின் அருஞ்சொற்பொருளை எபிரேயம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியில் தந்தார். ஒவ்வொரு வார்த்தையின் தோற்றத்தை அடையாளம் கண்டுபிடித்து பிற யூத மொழிகளில் / Semitic Languages புழங்கிய சகோதர வார்த்தைகளைத் தந்தார். இணை பொருட்சொல், எதிர்ச்சொல் முதலியவைகளையும் அவர் தந்தார். அவர் நூற்றாண்டுகளில் பொருள் மாறிய பல்வேறு வார்த்தைகளின் தொகுப்பையும் தந்தார். அவர் வார்த்தைகளை அன்றாட உரையாடலில் பயன்படுத்த சரமாரியாக எடுத்துக்காட்டுகளைத் தந்தார். உதாரணமாக எபிரேய மொழியில் לֹאLo என்றால் இல்லை என்று பொருள். இதற்கு 335 விதமான பிரயோகங்களைத் தந்துள்ளார். அது போல்  כֵּןKen என்றால் ஆமாம், உண்டு, அதனால் என்று பொருள் இதற்கு 210 விதமான பிரயோகங்களைத் தந்துள்ளார். 1908ல் வெளியான இவ்வகராதியின் முதல் பகுதி Aleph / ஆலெப் மற்றும் Bet/பேத் எழுத்துக்களின் தொகுப்பு மட்டுமே கொண்டிருந்தது. எபிரேய மொழியில் 22 எழுத்துக்கள் உண்டு அவற்றில் 5 எழுத்துக்கள் வார்த்தைகளின் முடிவில் தோன்றும் போது உருமாற்றம் பெற்று வரும். இதனை Sofit / சோபிட் என்பர்.

1917 வாக்கில் பென் எஹுடா எபிரேய மொழி அகராதி உருவாக்க முயற்சியில் மிக நல்ல முன்னேற்றம் கண்டிருந்தார். அது போல் செத்த நிலையில் இருந்த எபிரேய மொழியை உயிர்த்தெழச் செய்யும் முயற்சியில் இருந்த அவர், தம் சுவரில் என் நாட்கள் நீண்டவை, என் ஊழியம் ஆசிர்வதிக்கப்பட்டது “My day is long; my work is blessed.” என்று மாற்றி எழுதினார்.

 அவ்வருடத்தில் பின் பகுதியில் அவர் கண்ட கனவு நனவானது. நவம்பர் மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியர் Balfour Declaration பிரகடனம் செய்து, போருக்கு பின், யூத மக்களுக்கு பாலஸ்தீன நாட்டை, தாயகமாக உருவாக்கித் தரும் தம் எண்ணத்தை அறிவித்தனர். அதற்கு அடுத்த மாதம் எருஷலாயீம் நகரம் கூட்டுப்படையின் கரத்தில் வீழ்ந்ததால் நானூறு ஆண்டு டர்கி ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.

பென் எஹுடா இந்த முக்கியத்துவம்மிக்க சரித்திர நிகழ்வுகளை எல்லாம் “சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.”- சங்கீதம் 126:1 என்ற வசனத்தின் மூலம் பதிவு செய்தார்.

1921ல் பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீன ஆட்சி மொழியாக ஆங்கிலம், அரபிக் மற்றும் எபிரேய மொழிகளை என்று அங்கீகரித்தது. இதுவே பென் எஹுடா பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். உலகத்திலேயே முதல்முறையாக எபிரேய மொழியில் தபால் தலை வெளியிடப்பட்டது. 1922ல் அவரது அகராதியின்  ஐந்து பகுதிகள் வெளியானது. அவர் பாகங்கள் ஆறு மற்றும் எழு எழுதி முடித்திருந்தார். அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது.

1922ல் டிசம்பர் 14ல் பென் எஹுடா נָפֶשׁ Nefesh / ஆத்துமா எனும் வார்த்தை மீதான பணியை முடித்திருந்தார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஷப்பாத் முன் மாலைப் பொழுது. அவர் தம் மனைவியிடம் தான் பணிபுரிய இருக்கும் அடுத்த வார்த்தை “take a breath” என்றும், தான் இதை ஆண்டவர் சொன்னதாகவே எடுத்துக் கொண்டு பணியில் இருந்து விடுவித்துக் கொண்டு ஒய்வு எடுக்கப் போகிறேன் என்றார்.

அடுத்த நாளான ஷப்பாத் சமயம் தமக்கு பிரியமான எருஷலாயீம் நகர வீதிகளில் உலாவிவிட்டு வீடு திரும்பிய போது அவரது முகம் வெளிறியிருந்தது, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் ஒரு இருக்கையில் அமர அவரது மனைவி மருத்துவரை அழைத்தார். அதற்குள் நகரம் முழுவதும் செய்தி பரவி அவரது இல்லத்தில் அரசு அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பலர் கூடிவிட்டனர்.  பென் எஹுடா தம் நினைவுகளை இழந்தவராக காணப்பட்டார் . ஆனால் அவர் திடீரென்று விழித்துக்கொண்டு சுற்றியிருந்தவர்களை நோக்கி “ எபிரேயம் பேசுங்கள்” என்றார். பின் தம் மனைவியை அழைத்தார். அவர் மனைவி நலம் விசாரித்த போது, “எபிரேயமே எனக்கு ஒய்வு தருகிறது” என்றார். ஆம் 64 வயதில் அதுவே அவரது கடைசி வார்த்தைகள்.

பென் எஹுடாவின் மனைவி ஹெம்டா  மற்றும் அவரது மகன் எஹுட் இருவரும் மொழியியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அகராதி பணியை தொடர்ந்து செய்தனர். ஹெம்டா தன் 78வது வயதில் மறைந்தார். 1958ல் ஹெம்டா மறைந்து ஏழு ஆண்டுகள் கழித்து பதினேழு பகுதிகளுடன் அகராதியானது தயாரானது.

புதிய வார்த்தைகளை உருவாக்கவும் அதன் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும் மொழியியல் வல்லுநர்கள் குழு ஒன்று தேவை என்று தாம் அகராதி பணியில் ஈடுபட்டிருந்த போது பென் எஹுடா உணர்திருந்தார். மேலும் தம் அகராதியை மேம்படுத்தும் பணியைச் செய்ய ஒரு குழு தேவை என்று அறிந்திருந்தார். 1890ல் அவர் ஒரு குழு அமைத்து அதனை The Hebrew Language Committee என்றழைத்தார். இது இன்றளவும் The Academy of the Hebrew Language of the Hebrew University of Jerusalem என்று இயங்கி வருகிறது. வருடத்திற்கு ஏறத்தாழ 2000 புதிய எபிரேய சொற்களை உருவாக்குகிறது.

தம் வாழ்நாளில் பென் எஹுடா  எபிரேய மொழியை பயிற்றுவிக்க மிகத் தீவிரமான வழிமுறையை உருவாக்கி இருந்தார். பயிற்சியின் போது எபிரேயம் தவிர வேறெதுவும் பேசாமல் இருப்பது. அது மிக வலிமையானதாக இருந்ததால் அவரது மனைவி ஆறே மாதத்தில் எபிரேய மொழியில் வல்லுநர் ஆனார். இந்த வழிமுறையில் தான் இன்றும் Ulpan/உல்பான் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. இஸ்ரயேலில் 220 உல்பான் பள்ளிகள் மூலம்  25,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு இன்று எபிரேய மொழி கற்பிக்கப்படுகிறது.

இன்று இஸ்ரயேலில் இருநூறுக்கும் அதிகமான புத்தக பதிப்பகங்கள் உள்ளன.  அவர்கள் வருடம்தோறும் எபிரேய மொழியில் ஐந்து முதல் நூற்றைம்பது புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்.

1966ல், S.Y. Agnon எனும் இஸ்ரயேலைச் சேர்ந்த எழுத்தாளர் எபிரேய மொழியில் சிறந்த புதினங்கள் படைத்ததால், இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்றார்.  2013 கணக்கெடுப்புபடி உலகம் முழுவதும் எபிரேய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை ஒன்பது மில்லியன் அவர்களில் ஏழு மில்லியன் பேர் மிகச் சரளமாக பேசுபவர்கள்.

எருஷலாயீம் நகரில் அமைந்த Mount of Olives /ஒலிவ மலைச் சாய்வுகளில் பென் எஹுடாவின் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் “Eliezer Ben Yehuda, reviver of the Hebrew tongue and composer of the great dictionary.” என்கிற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

அவரது வாழ்க்கையின் மிகச் சிறந்த அதிசயம், அற்புதம் எபிரேய மொழி மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டு அல்ல. மருத்துவர்கள் அவருக்கு ஆறு மாதம் மட்டுமே உயிர் வாழும் நிலை என்று கொடுத்த காலக் கெடுவை, கர்த்தராகிய எஷூவா / Yeshua,  41 ஆண்டுகள் அவருக்கு ஆயுட்காலத்தை நீட்டித்து கொடுத்து இம்மொழி உயிர்த்தெழ ஆசிர்வதித்ததே.

பென் எஹுடா, அவரது சாதனையின் மூலம் மீண்டும், மீண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆவது என்னவென்றால் பரிசுத்த வேதாகமே ஆண்டவருடைய வார்த்தை. அதுவே சத்தியம்! காலங்களை அவரே ஆள்கிறார்! வரலாறு அவரது வேத வசனங்கள் நிறைவேறி வருகிறதை அறிவிக்கிறது.

இன்று எபிரேய மொழி கற்கும் விசுவாசிகள் மேலும் ஒரு மொழி கற்றோம் என்கிறதைவிட கூடுதலாக அவர்கள் திருச்சபையின் யூத வேர்களை அறிந்து கொள்கிறார்கள், எஷூவா ஹாமஷியாஹ்/ Yeshua HaMashiach – ஆண்டவரின் உண்மையான அடையாளங்களை தெரிந்து கொள்கிறார்கள் மேலும் தேவ ஆவியானவரின் இறுதி நிறைவேற்றத்தில் பங்கு கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

ஷலோம்