எலியேசெர் பென் எஹுடா எருஷலாயீமிற்கு வரும் முன்பே ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மனதில் தீட்டியிருந்தார், அதை அவர் தீவிரமாகவும் முறையாகவும் கடைப்பிடித்தார். அது பல கூறுகளைக் கொண்டதாயிருந்தது,

1. வீட்டில் எபிரேய மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்த வேண்டும்

2. செய்திப் பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் எபிரேய மொழியில் செய்திகளை பிரசுரிக்க வேண்டும் மேலும் தேவைப்படும் நேரங்களில் புதிய சொற்களை உருவாக்கவும் வேண்டும்.

3. எபிரேயத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி கற்கவும், பேசவும் ஆவன செய்ய      வேண்டும்

4. எபிரேய மொழி அகராதி ஒன்றை தயாரித்து அன்றாட மொழிப் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும்

பென் எஹுடா முதலில் இதை தன் வீட்டில் கடைப்பிடித்தார். தன் வீட்டில் எபிரேயம் தவிர பிற மொழியில் பேசுவதை தடுத்தார். அவர் தன் குடும்பமே ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார். அதன் பொருட்டு டெபோரா கருவுற்ற சமயம், அவள் ஈராயிரம் வருடங்களில் முதன் முறையாக வேதாகம எபிரேயம் மட்டுமே கேட்கப் போகிற ஒரு உண்மையான எபிரேயக் குழந்தையை சுமக்கிறாள் என்று அவர் அறிவித்தார். இதன் பொருள் என்னவெனில் அக் குழந்தைக்கு விளையாட்டுத் துணை கிடையாது மேலும் முழுமையாக வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நிலை.

இந்த வெறித்தனத்தைக் கண்ட நண்பர்கள் திகிலுற்றனர். பென் எஹுடா தன் மனதை மாற்றிக்கொள்ளும்படி அவர்கள் அவரிடம் மன்றாடினர் ஏனென்றால் இவ்வாறு வளரும் குழந்தை ஊமையாகவோ அல்லது முட்டாளாகவோ ஆகிவிடும் என்று வாதித்தனர். ஆனாலும் பென் எஹுடா அடங்கவில்லை.

1882இல் டெபோரா முதல் குழந்தையைப் பெற்றாள். ஆண் குழந்தை, அவனுக்கு Ben-Zion Ben-Yehuda பென் சியோன் பென் எஹுடா என்று பெயரிட்டனர்.

இப் பெயரின் பொருள் இதுவேயாகும், சியோனின் மகன், யூதேயாவின் மகன். பென் எஹுடா சொன்னபடியே அவருடைய மகன் இந்த உலகத்தில் பிற மொழிகள் கேட்டு, கெட்டு விடக்கூடாது என்பதற்காக தனிமைபடுத்தப்பட்டான்.

அவருடைய நண்பர்கள் தொடர்ந்து அவரை எதிர்த்தார்கள் அவ்வாறு குழந்தையை தனிமைப் படுத்தக்கூடாது என்று. நான்கு வருடங்கள் கடந்தும் குழந்தை பென் சியோன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தெளிவின்றிப் பேசியதால் நண்பர்கள் பென் எஹுடாவை மிகக் கடுமையாகச் சாடினர். ஆனால் பென் சியோன் தன் நான்காவது பிறந்த நாளைக் கடந்து சில மாதங்கள் சென்று தன் முதல் வார்த்தையைப் பேசினான் – Abba, அப்பா. அது முதல் அவன் வேகமான நீரோட்டம் போல வார்த்தைகளைக் கக்கத் தொடங்கினான். தன் தந்தையைப் போல் வீட்டிலிருக்கும் பொருட்களுக்கு புதிய வார்த்தைகளை சொல்லத் தொடங்கினான்.

பென் எஹுடா எருஷலாயீமிற்கு வந்த சில நாட்களிலேயே பத்திரிக்கை ஒன்றை பிரசுரிக்கத் தொடங்கினார். இது அவருடைய முக்கிய திட்டம் தொடர்புடையது மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கைக்கான வருமானம் பெறும் வழியாகவும் இருந்தது. எருஷலாயீமில் இருந்த பொதுமக்களிற்கு இப்பத்திரிக்கை மிகப் பிடித்திருந்தது. அவர்கள் இதற்கு முன்பு எபிரேய மொழியில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை. பாலஸ்தீன விவசாயப் பிரதேசங்களில் சிதறிக் குடியேறிய மக்களும் விரும்பினர். ஆனால் ஆச்சாரமான யூதர்களுக்கு இது பிடிக்கவில்லை அவர்கள் இதை அழிக்க முடிவு செய்து பல முறை பல சந்தர்ப்பங்களில் முயற்சித்துப் பார்த்தனர்.

இப்பத்திரிக்கையை வெளியிட பென் எஹுடா தொடர்ச்சியாக புதிய வார்த்தைகளை உருவாக்க வேண்டியிருந்தது. அவர் சந்தித்த முதல் சவால் ‘பத்திரிக்கை’ என்கிற வார்த்தைக்கு சரியான எபிரேய வார்த்தையை உருவாக்குவது. அந்த சமயத்தில் எருஷலாயீமில் Michtav-et, என்று அதை அழைத்தனர். இதன் பொருள் ‘காலத்தின் கடிதம்’. பென் எஹுடாவிற்கு இந்தப் பெயரில் விருப்பமில்லை. அவர் அதில் நயமில்லை எனக் கண்டார். ஆதலால் அவர் ‘நேரத்திற்கான’ எபிரேயச் சொல்லை எடுத்துக் கொண்டு அதனை மேலும் செம்மைப்படுத்தி ‘இட்டன்’ என்னும் சொல்லைக் கண்டு பிடித்தார், அது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவர் இது போல் பிற சொற்கள் பலவற்றிக்கும் புதிய எபிரேயச் சொற்களை உருவாக்கினார். உதாரணமாக போர் வீரன், விமானம், போட்டி, பொம்மை, ஐஸ்க்ரீம், ஜெல்லி, ஆம்லெட், கைக்குட்டை, துண்டு, மிதி வண்டி மேலும் நூற்றுக்கணக்கானவைகள்.

நாம் இங்கு வாசிப்பது நம் தமிழ் மொழியில் நம் அறிஞர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட நாம் இன்று பயன்படுத்தும் வார்த்தைகள். ஆனாலும் ஐஸ் க்ரீம், ஜெல்லி, ஆம்லெட் போன்றவைகளுக்கு தமிழ் வார்த்தைகள் இருந்தாலும் நாம் ஆங்கிலத்தில் சொல்வதையே விரும்புகிறோம். மேலும் அது வசதி என்கிறோம்.

எது எப்படி இருப்பினும் நம்முடைய ஆண்டவரின் வேதத்தை தமிழில் நம்மிடம் கொண்டு வந்த Bartholomaus Zigenbalg, Johann Phillip Fabricius போன்ற கர்த்தருடைய மெய் ஊழியர்களை நாம் இத்தருணத்தில் நினைவிற் கொள்வது மிக, மிக அவசியமாகிறது.

சில நேரங்களில் பென் எஹுடாவின் புதிய சொற்கள் ஏற்கப்படவில்லை.

அதில் ஒரு வார்த்தை அவர் ‘தக்காளிக்கு’ உருவாக்கியது. Agbanit / ‘அக்பனிட்’ என்கிற வார்த்தையை மக்கள் அதிகம் பயன் படுத்தி வந்தனர். அதுவே புழக்கத்தில் இருந்தது. இதன் வேர்ச்சொல் கொண்ட பொருள் சரியாய் இல்லை என்று பென் எஹுடா கருதினார் அதனால் அவர் படுராஹ் என்று ஒரு வார்த்தையை உருவாக்கினார். ஆனால் எபிரேய மக்கள் அக்பனிட் என்கிற சொல்லையே பயன்படுத்தி வந்தனர்.