ஆண்டவரின் சத்திய வார்த்தையே வேதாகமம்! காலங்களை அவரே ஆள்கிறார்! நாம் ஆண்டவரின் வருகையின் காலத்தில் இருக்கிறோம் என்பதையும் வரலாறு அவரது வேத வசனங்களை நிறைவேற்றி வருகிறதையும் இப்பதிவில் பார்ப்போம்.

உலக வரலாற்றில் வழக்கொழிந்த ஒரு மொழி, இன்றைய நவீன உலகத்தில்,  ஒரு நாட்டின் பேச்சு மொழியாக உயிர்ப்பிக்கப்பட்டது என்றால் அது Hebrew / எபிரேயம் மட்டுமே. Biblical Hebrew / வேதாகம எபிரேயம், பேச்சு மொழியாக உருபெற்றது வரலாற்றில் ஒரு மாபெரும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வு.

Extinct languages list என்று கூகுள் செய்து பார்த்தால், மேலே சொல்லப்பட்ட நிகழ்வின் தன்மை, நிலைமை, தீவிரம் புரியும். ஏறத்தாழ ஐந்நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிட்டன.

கி.மு. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க அறிஞன் Homer / ஹோமெரின் காவியங்களை கிரேக்க மொழியில் வாசிக்க முடியாத, கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் Geoffrey Chaucer / ஜெப்ரி சாசெரின் காலத்திய ஆங்கில மொழியை வாசிக்க முடியாத, கி.மு. 3 கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மொழியில்,  சங்கத் தமிழ் இலக்கியங்களை வாசிக்க முடியாத சிறார்களும், பெரியோர்களும் வாழும் இவ்வுலகத்தில், Bar Mitzvah / பார் மிட்ஸ்வா சமயம் 13 வயது பாலகன் வாசிக்கும் எபிரேய மொழி வேதாகம வரிகளின் வயது ஏறத்தாழ 2000 ஆண்டுகள் ஆகும்.

மொழியின் தொன்மையை எண்ணிப் பார்த்தால் மிகுந்த ஆச்சர்யம் தரும்.

இதில் இருந்தே நாம் ஆண்டவரின் மொழியின் சிறப்பை, அற்புதத்தை, அடையாளத்தை உணரலாம்.

கி.பி. 70ம் நூற்றாண்டில் Jerusalem / יְרוּשָׁלַיִם‎ / எருஷலாயீம் நகரம் ரோமப் பேரரசால் அழிக்கப்பட்டு யூத மக்கள் ஒடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றனர். அது கி.பி. 136ம் நூற்றாண்டில் மேலும் தீவிரமடைகிறது. சிதறடிக்கப்பட்டதால் யூத மக்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் தங்கள் சொந்த மொழியை பேசும் வழக்கம் ஒழியத் தொடங்கியது. இது பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

ஐரோப்பாவில் குடியேறிய யூதர்கள் German / ஜெர்மன் மொழியோடு ஹீப்ரு மொழியை கலந்து Yiddish / இட்டிஷ் என்னும் புது கலப்பின மொழி பேசத் தொடங்குகின்றனர். அது போல் மத்திய தரை கடல் பகுதி நிலங்களில் குடியேறிய யூதர்கள் Spanish / ஸ்பானிஷ் மொழியோடு Hebrew / ஹீப்ரு மொழியை கலந்து Ladino / லடினோ என்னும் மொழி பேசத் தொடங்குகின்றனர்.
லத்தின்(Latin) வேறு! லடினோ (Ladino) வேறு!

‘எபிரேயம்’ ஆலயத்தில் மட்டும் பேசப்படும் நிலை உருவானது. அப்படியே அது  ஆலய வழிப்பாட்டு மொழியானது. தோராவை தேவாலயங்களில் எபிரேயத்தில் வாசிப்பது வழக்கமானது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பான்மையான யூதர்களுக்கு எபிரேயத்தில் வாசிக்கப்படும் Torah / தோராவானது புரியாத நிலை உருவானது. எது போலவெனில் புறஜாதி மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் லத்தின் மொழி திருப்பள்ளியில் பங்கேற்பது போன்று ஆயிற்று.

ஆனால் இவை அனைத்தும் ஆண்டவரின் தீர்க்கதரிசன வசனம் நிறைவேறும் காலத்தில் மாறத் துவங்கிற்று.

செப்பனியா 3:9 ல் கூறிய தீர்க்கதரிசனம் செயல்படும் வண்ணம் ஆண்டவர் 1858ல் ஒரு ஆச்சாரமான யூத குடும்பத்தில், Lithuania / லித்துவேனியாவில் (அன்றைய ரஷிய நாட்டு பகுதி) ஒரு மகனை பிறக்கச் செய்கிறார்.

Eliezer Yitzhak Perlman – எலியேசெர் இத்ஷாக் பெர்ல்மன் என்பது அவரது பெயர்.

எலியேசெருக்கு ஐந்து வயது இருக்கும் போது அவரது தந்தை காச நோயால் இறக்கிறார். இதனால் கண்டிப்பான தன் தாய் மாமன் வீட்டில் வளர்கிறார். 13 ம் வயதில் பார் மிட்ஸ்வா நடந்து யூத பாரம்பரியபடியே கல்வி பெற Belarus /பெலாரசில் உள்ள Yeshiva / எஷிவாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு மிக முற்போக்கான சிந்தனைகளை உடைய ரபி ஒருவர் ஆசிரியராக அமைகிறார்.

ஒரு நாள் அந்த ரபி எலியேசெரிடம் எபிரேய மொழிபெயர்ப்பில் வெளியான Daniel Defoe / டேனியல் டெஃபொ எழுதிய Robinson Crusoe / ராபின்சன் குருசோ நாவலைக் கொடுத்து சத்தமாக வாசிக்கச் சொல்கிறார். இது 1872 இல் நடக்கிறது. எலியேசெர் அதை வாசிக்க, வாசிக்க வியப்படைகிறார். அது நாள் வரை ஆச்சாரமான யூதர்களால் எபிரேய மொழி வழிபாட்டிற்கு மட்டுமேயானது என்றும் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும், அப்படிச் செய்வது பாவகரமானது, கடவுளை இழிவுபடுத்தும் செயலாகும் என்ற வழிமுறையின்படியே வளர்க்கப்பட்டிருந்தார். மேலும் ரபிகள் இலக்கியங்களை படைக்க மட்டுமே எபிரேய மொழி பயன்படுத்தப்பட்டிருந்தது. மதச்சார்பற்ற தளங்களில் எபிரேய மொழி பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் புத்தக வாசிப்பு அவருக்குள் ஒரு பொறியை மூட்டியது. எபிரேயம் வழிப்பாட்டுக்கு மட்டுமல்லாமல் பிற சமயங்களிலும் பயன்படுத்தும் மொழியாக மாற வேண்டும் என்கிற எண்ணம் கனல் கொண்டு அவரது வாழ்க்கை முடிய அணைக்க முடியாத பெரும் தீயாக மாறியது.

எலியேசெர் ஒரு இளம் மேதை மூன்று வயது முதல் வேதாகமத்தை எபிரேயத்தில் வாசிக்க தொடங்கி விடுகிறார். இவரது குடும்ப மொழி இட்டிஷ். எபிரேயத்தை அன்றாட வாழ்கையில் பேசும் வழக்கமோ சூழலோ இல்லாத நிலை. அது நாம் தமிழ் மொழியில் சொல்வது போல் “செய்யுள்” தரத்தில் அமைந்திருந்தது. எளிதான பயன்பாட்டிற்கான போதுமான வார்த்தைகள் இல்லாதிருந்தது.

எலியேசெரின் எண்ணங்களை, போக்கை விரும்பாத மாமா அவரை எஷிவாவில் இருந்து வெளியே எடுத்து துரத்தி விடுகிறார். துரத்தி விடப்பட்ட எலியேசெர் சுற்றித் திரிந்து ரஷ்யாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தஞ்சமடைகிறார். அங்கு அவர் Solomon Jonas / சாலமன் ஜோனஸ் என்னும் மிகச் சிறந்த மனிதரை சந்திக்கிறார். அவர் எலியேசெரை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சாலமன் ஜோனசுக்கு ஆறு குழந்தைகள். இவரது மூத்த மகள் டெபோரா, எலியேசருக்கு பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் மொழிகளை பயிற்றுவிக்கிறாள். பின் எலியேசர் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக Latvia / லட்வியாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அங்கு அவர் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.